×

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது

கிருஷ்ணகிரி, மார்ச் 17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், கூடுதலாக 6 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி(வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு நிருபர்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள 8,11,375 ஆண்கள், 8,06,354 பெண்கள், இதரர் 305 பேர் என மொத்தம் 16,18,034 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் உணர்ந்து, 100 சதவீத ஓட்டளிப்பை கொடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு அருகாமையில் உள்ள மாவட்டம். இம்மாவட்ட எல்லைகளில் ஏற்கனவே 9 சோதனைச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கண்காணிப்பு வசதி செய்யப்படவுள்ளது. இதை நேரடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும். தேர்தல் நடத்தை விதிமீறல்கள், விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், மது, பரிசுப்பொருட்கள் கண்காணிக்கப்படும். இதுகுறித்து தகவல் தெரிந்தால், 1800 425 7076, 04343 230121, 04343 230124, 04343 230125, 04343 230126, அல்லது 1950 என்ற கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து கண்காணிக்க, 24 மணி நேர கண்காணிப்பு மையம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) தலைமையில் சுழற்சி முறையில் மூன்று குழுக்கள் செயல்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த 1883 வாக்குச்சாவடிகளில், 5 புதிய வாக்குச்சாவடிகளை சேர்த்து, வரும் தேர்தலில் 1,888 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், 128 பகுதிகளில் 356 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் புகார்களை c-Vigil என்னும் செயலி மூலம் தெரிவித்தால், 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் வழிகாட்டியுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சரயு கூறினார். இந்த கூட்டத்தில் எஸ்பி தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் புஷ்பா(பொது), லெனின்(தேர்தல்), கோட்டாட்சியர் பாபு, ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி ஆணையாளர் சரண்யா, தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், சம்பத் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெளி மாநில மது விற்ற 42 பேர் மீது வழக்குபதிவு